பெண்ணியம் பேசுவோர் கரிசனை கொள்வதில்லை


நடந்து முடிந்த யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கியுள்ளது. போர்க் கால விதவைகளின் இன்றைய நிலைமைகள் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை.

Posted on:
2017-03-09 03:43:18

பெண்ணியம் பேசுவோர் கரிசனை கொள்வதில்லை

நடந்து முடிந்த யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கியுள்ளது. போர்க் கால விதவைகளின் இன்றைய நிலைமைகள் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. இளம் விதவைகள் பலர் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான துன்பம் பெரிதாக கண்டு கொள்ளப்படாமை விசனத்திற்குரியது. பெண்ணியம் பேசுபவர்களும், மனிதநேய அமைப்புகளும் இத்துன்பவியல் பற்றி ஆழமான கவனத்தைச் செலுத்தவில்லை என்பதைக் கூற வேண்டும்.

இவற்றை விட குடியேற்ற நடவடிக்கைகள் துரிதமாக அரசினால் நிறைவேற்றப்படவில்லை என்பது பரவலான கருத்தாக உள்ளது. தமது சொந்த இடங்களுக்கு மீண்டவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான தொழில் வாய்ப்புகள் மீளவும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. முள்வேலி முகாமுக்குள் இருந்து மீண்டு வந்த இடம்பெயர்ந்தோர் தமது சொந்த இடங்களில் கொண்டு வந்து விடப்பட்ட போதும் திக்குத் தெரியாத காட்டில் வாழ்கின்ற நிலையே உள்ளது. இன்னமும் கணிசமானோரினால் தமது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொந்த நிலங்களுக்குச் செல்ல முடியவில்லை.

மீள்குடியேறியவர்களில் பல குடும்பங்களுக்கு தலைமை தாங்குபவர்கள் விதவைப் பெண்களாக உள்ளனர். கணவரின் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் இன்று குடும்பத்திற்கான முழு வருவாயையும் ஈட்டி குழந்தைகளை வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். உரிய வருவாயை ஈட்ட முடியாதுள்ள இவர்களால் பிள்ளைகளை பசி, பட்டினியின்றி வளர்க்கவும், முறையான கல்வியை புகட்ட முடியாமலும் இருக்கின்றது. இதனால் பாடசாலை இடைவிலகலும் அதிகரிக்கின்றது. தாமும் வேலைக்குச் செல்வதால் பதின்மப் பருவ பிள்ளைகளைக் கடடுப்பாட்டுக்குள் வளர்க்கவும் முடிவதில்லை. இளமை உறுத்தல்களுடன் கடுப்பாட்டுடன் வாழும் இவர்களுக்கு பாலியல் தொல்லைகள் பல்வேறு முனைகளிலிருந்தும் வதைக்கின்றமை இன்னொரு சாபக்கேடாக உள்ளது.

யுத்தம் காரணமாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ்ப் பெண்கள் பல்வேறு தரப்பினராலும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

ஆசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்குமான செயலணியின் தலைவி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களும் அண்மையில் இதனைத் தெரிவித்துள்ளமை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஏற்கனவே போரில் கணவனை இழந்து தவிக்கும் பெண்கள் மீதான இவ்வாறான துஷ்பிரயோகம் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு வித்திடுவதாகவும் உள்ளது. ஏற்கனவே சொல்லொணா இழப்புக்களால் மனமுடைந்திருக்கும் பெண்கள் பாலியல் இலஞ்சம் கோரப்படும் போதும், துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படும் போதும் உளவியல் ரீதியில் பெரும் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். இவர்களுக்கான உளவியல் ஆலோசனைக்கான சந்தர்ப்பங்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவே இருக்கின்றன. இதனால் பாலியல் துன்பம் ஒரு தொடர்கதையாக நீடிக்கும் போது சமூகமட்டத்திலான பாலியல் பிறழ்வுகளும் அதிகரிக்கின்றன. பாலியல் வன்புணர்வு என்றில்லாமல் பாலியல் ரீதியிலான அழுத்தங்களினாலும் பல பெண்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

பெண்களின் அவல நிலையை போக்குவதற்கான முதல் படியாக குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன் தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்த வேண்டும். சுயதொழிலுக்கான ஆரம்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருவாயீட்டும் வழிகளை காண்பிக்க வேண்டும். பெண்களுக்கு இருக்கின்ற பாலியல் அபாயத்தைக் குறைப்பதற்கு சிறந்த வழி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலே ஆகும். உரிய பொருளாதார வலு கிடைக்குமாயின் அவர்களுக்கு தைரியமும் மனோபலமும் கிட்டும். அவர்கள் தொடர்ந்து சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்படாது.

பெண்களின் அமைப்பு ரீதியிலான விடுதலைக்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெண்ணிய மேம்பாட்டுக்கான பயணத்தில் பெண்களிடையே ஒற்றுமை தேவை. இவ்வாறான செயற்பாடுகளை ஆண்களுக்கு எதிரானதாக அன்றி ஆணாதிக்கத்திற்கு எதிரானதாகவே மேற்கொள்ள வேண்டும். ஆண்களை ஒதுக்கிவிட்டு பெண்ணியத்தை மேம்படுத்த முடியாது. ஆண்களின் ஆதிக்க மனப்போக்கை அவர்களாகவே உணர்ந்து மாற்றிக்கொள்ளும் வகையில் செயற்பட வேண்டும். மனித நேயம் மிக்க ஆண்களையும் இப்பயணத்தில் இணைத்துக் கொள்ளுதல் அவசியமானது. பெண்ணியம் ஆண்களுக்கு எதிரானதல்ல. ஆணாதிக்கத்திற்கு எதிரானது.

பெண்களுக்கு எதிரான பாலியல் அழுத்தங்கள் பற்றி முறையிடுவது குறைவாகவே உள்ளது. இதற்கு சமூக பாரம்பரிய நடைமுறைகள் தடையாக இருப்பதே காரணமாக உள்ளது. முறையிட்ட பெண்ணையே தவறாக நோக்கும் அவல நிலையை முறைப்பாடு செய்வதைத் தடுக்கின்றது எனலாம்.

போர்க்கால விதவைகளில் இளமையாக உள்ளவர்களையும் போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளான பெண்களையும் மணம் செய்ய போரின் போது மனைவியை இழந்துள்ள முற்போக்கானவர்களும், இளைஞர்களும் முன்வர வேண்டும். புண்பட்டுப் போயுள்ள எமது பெண்களுக்கு எம்மால்தான் விடிவை ஏற்படுத்தித் தர முடியும். பிரதிபலன் கருதாத உதவி ஒத்தாசைகளும் கூட துன்பமுற்றிருக்கும் மனதுக்கு ஒத்தடம் கொடுக்கும். எமது தலைமைகளும் பொருளாதார மேம்பட்டிக்கு ஆவன செய்ய வேண்டும்.

சந்திரகாந்தா முருகானந்தன்